என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

11 . விஸ்வரூப தரிசன யோகம் ( வாழ்க்கையின் மறுப்பக்கம் ) ( VISION OF THE COSMIC FORM )


11 .  விஸ்வரூப தரிசன யோகம்

( வாழ்க்கையின் மறுப்பக்கம் )

11.1 : அர்ஜுனன் சொன்னது : மேலான, ரகசியமான ஆத்மதத்துவத்தை பற்றி நீ கூறியருளியதால் எனது மனமயக்கம் போய்விட்டது.
11.2 : தாமரை இதழ் போன்ற கண்களை உடையவனே ! உயிர்களின் பிறப்பு இறப்பு பற்றியும் உனது எல்லையற்ற மகிமை பற்றியும் உன்னிடமிருந்தே நான் விரிவாக தெரிந்துகொண்டேன்.
11.3 : பரமேசுவரா ! நீ உன்னை பற்றி சொன்னவை அனைத்தையும் அப்படியே உண்மை. புருஷோத்தமா ! இனி உனது தெய்வ வடிவை நான் காண விரும்புகிறேன்.
11.4 : எம்பெருமானே ! யோகேசுவரா ! அந்த தெய்வ வடிவத்தை காண நான் தகுதி பெற்றவன் என்று நீ கருதினால் அழிவற்ற அந்த உனது வடிவை எனக்கு காட்டி அருள்வாய்.
11.5 : அர்ஜுனா ! பலவிதமான, தெய்வீகமான பல நிறங்களும், வடிவங்களும் உடைய எனது உருவங்களை நூற்றுக்கணக்காக ஆயிரக்கணக்காக பார்.
11.6 : அர்ஜுனா ! ஆதித்தர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அசுவினிகள், மருத்துகள் என்று பலரையும் பார். இது வரை காணாத பல ஆச்சர்யங்களையும் பார்.
11.7 : தூக்கத்தை வென்றவனே ! அசைவதும் அசையாததுமாகிய உலகம் முழுவதையும் இன்னும் வேறு எதையெல்லாம் பார்க்க விரும்பினாயோ அவையெல்லாம் எனது இந்த உடம்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை இப்போது பார்.
11.8 : உனது இந்த கண்ணினால் என்னை பார்க்க இயலாது.எனவே உனக்கு தெய்வீக கண்ணை தருகிறேன். எனது யோக சக்தி மகிமையை பார்.
11.9 : சஞ்சயன் சொன்னது : மன்னா ! மகா யோகேசுவரராகிய கிருஷ்ணர் இவ்வாறு கூறிவிட்டு, மேலான தமது தெய்வீக வடிவை அர்ஜுனனுக்கு காட்டினார்.
11.10 : அந்த வடிவம் எண்ணற்ற முகங்களும் கண்களும் உடையது. பல அதிசிய காட்சிகள் நிறைந்தது. பல தெய்வீக ஆபரணங்கள் அணிந்து தெய்வீகமான பல ஆயுதங்கள் ஏந்தியது.
11.11 : அந்த வடிவம் அழகிய மாலைகளும் ஆடைகளும் அணிந்தது. சிறந்த வாசனை திரவியங்கள் பூசியது. பெரும் வியப்பை ஊட்டுவது. ஒளியுடன் பிரகாசிப்பது. எல்லையற்றது. எங்கும் முகம் உடையது.
11.12 : ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் ஆகாயத்தில் உதித்தால் அது பரம்பொருளின் ஒளிக்கு சமமாக இருக்கும்.
11.13 : பலவிதமாக தோன்றுகின்ற பிரபஞ்சம் முழுவதும் அந்த தேவதேவனுடைய உடம்பில் ஒன்று சேர்ந்திருப்பதை அர்ஜுனன் அப்போது கண்டான்.
11.14 : உடனே அர்ஜுனன் வியப்புடனும், மயிர்சிலிர்ப்புடனும் அந்த தேவனை தலையால் வணங்கி கூப்பிய கைகளுடன் கூறலானான்.
11.15 : அர்ஜுனன் சொன்னது : எம்பெருமானே ! உனது திருமேனியில் எல்லா தேவர்களையும், பல்வேறு உயிரினங்களையும், தாமரையில் வீற்றியிருக்கின்ற பிரம்மாவையும், சிவனையும், எல்லா ரிஷிகளையும், தேவ சர்ப்பங்களையும் காண்கிறேன்.
11.16 : உலகின் தலைவனே ! எண்ணற்ற கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் உடைய உனது எல்லையற்ற வடிவத்தை எங்கும் காண்கிறேன். உலக வடிவினனே ! உனது முடிவையோ நடுவையோ ஆரம்பத்தையோ காணமுடியவில்லை.
11.17 : மகுடம் தரித்து கதை தாங்கி சக்கரம் ஏந்திய பேரொளி பிழம்பான எங்கும் பிரகாசிக்கின்ற கண்ணால் காண முடியாத சுடர் விடுகின்ற நெருப்பு போலவும் சூரியனை போலவும் ஒளிர்கின்ற அளவிட்டு அறியமுடியாத உன்னை எங்கும் காண்கின்றேன்.
11.18 :  நீ அழிவற்றவன், மேலானவன், அறியபடவேண்டியவன். இந்த பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம் நீ. நீ மாறாதவன். தர்மத்தின் நிலையான காவலன். என்றென்றும் இருப்பவன் . நீயே இறைவன் என்பதை நான் உணர்கிறேன்.
11.19 : நீ ஆதி, நடு, முடிவு இல்லாதவன், எல்லையற்ற ஆற்றல் உடையவன், எண்ணற்ற கைகள் உடையவன், சந்திர சூரியர்களை கண்களாக கொண்டவன், சுடர் விடுகின்ற அக்னி போல் முகம் உடையவன், தேஜசால் இந்த பிரபஞ்சத்தை எரிப்பவனாக உன்னை நான் காண்கின்றேன்.
11.20 : பரம்பொருளே !  விண்ணும் மண்ணும் இடைவெளியும் எல்லா திசைகளும் உன் ஒருவனாலேயே வியப்பிக்கபட்டுள்ளது. உனது இந்த உக்கிரமான அற்புத உருவை கண்டு மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
11.21 :  தேவர்கள் உன்னில் பிரவேசிக்கிறார்கள். சிலர் பயத்தால் கைகூப்பி உன்னை புகழ்கிறார்கள். வாழ்க என்று கூறி முனிவர்களும் சித்தர்களும் உன்னை அழகிய துதிகளால் போற்றுகிறார்கள்.
11.22 : ருத்திரர்கள், ஆதித்தர்கள், வசுக்கள், சாத்தியர்கள், விசுவே தேவர்கள், அசுவினிகள், மருத்துக்கள், ஊஷ்மபர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் எல்லோரும் திகைப்புடன் உன்னை பார்க்கிறார்கள்.
11.23 : பெரிய கைகளை உடையவனே ! பல முகங்கள், கண்கள், கைகள், தொடைகள், பாதங்கள், வயிறுகள், பயமுறுத்துகின்ற வளைந்த பல பற்கள் என்று காட்சியளிக்கின்ற உனது பெரிய உருவத்தை கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
11.24 : மகாவிஷ்ணுவே ! பல நிறங்களுடன் வானை தொடுவது போல் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய , கனல் வீசும் பெரிய கண்களை கொண்ட உன்னை கண்டு என் மனம் நடுங்குகிறது. தைரியமும் மன அமைதியும் என்னை விட்டு அகல்கின்றன.
11.25 : தேவாதிதேவா ! பயமுறுத்துகின்ற கோரபற்கள் உடையதும் பிரளயகால  அக்னிக்கு ஒப்பானதுமான உனது முகங்களை கண்டதும் என் மனம் நிலைகுலைந்து விட்டது. எனக்கு திசைகள் தெரியவில்லை, உலகிற்கு ஆதாரமாணவனே ! அருள் புரிவாய்.
11.26 – 27 : இதோ திருதராஷ்டிரரின் பிள்ளைகள், மன்னர்கள் கூட்டம், பீஷ்மர், துரோணர், கர்ணன், நம்மவர்களுள் முக்கிய வீரர்கள் என்று அனைவரும் பயங்கரமான வளைந்த பற்கள் உடைய உனது வாய்களில் பரபரப்பாக புகுகிறார்கள். சிலர் தூளாக்கப்பட்ட தலைகளுடன் பல் இடுக்குகளில் அகப்பட்டு கிடக்கிறார்கள் .
11.28 : நதிகளின் வேகம் மிக்க பல பிரவாகங்கள் எவ்வாறு கடலை நோக்கி பாய்கின்றனவோ, அவ்வாறே இந்த வீரர்களும் எங்கும் பிரகாசித்து கொண்டிருக்கின்ற உனது வாய்களில் புகுகிறார்கள்.
11.29 : விட்டிற்பூச்சிகள் அழிவதர்க்காக எவ்வாறு, சுடர் விட்டெரியும் தீயில் வெகு வேகமாக பாய்கின்றனவோ அவ்வாறே இந்த மனிதர்களும் அழிவதற்க்காகவே உனது வாய்களுள் மிகுந்த வேகத்துடன் புகுகிறார்கள்.
11.30 : திருமாலே ! சூழ்ந்துள்ள எல்லா உலகங்களையும் பிரகாசிக்கின்ற வாய்களால் விழுங்கி ருசி பார்கிறாய் நீ. உனது உக்கிரமான ஒளி எல்லா உலகையும் பிரகாசத்தால் நிரப்பியபடி எரிகிறது.
11.31 : பயங்கர உருவுடைய நீ யார் என்று எனக்கு சொல்வாய். உன்னை வணங்குகிறேன். உனது செயல்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. தேவர் தலைவா ! அருள் புரிக. முதல்வனாகிய உன்னை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
11.32 : பகவான் சொன்னது : உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். இங்கே உலகங்களை அழிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரிட்டு கொல்லாவிட்டலும் எதிராளிகளின் படையில் யாரும் மிஞ்ச போவதில்லை.
11.33 : இடது கையால் கூட அம்பு எய்பவனே ! எழுந்திரு, புகழ் பெரு, எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த அரசை அனுபவி. இவர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ கருவியாக மட்டும் இரு.
11.34 : என்னால் கொல்லப்பட்டுவிட்ட துரோணர் , பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் பிற போர்வீரர்களையும் நீ கொல். அஞ்சி வருந்தாதே. போரில் எதிரிகளை வெல்வாய். போர் செய்.
11.35 : சஞ்சயன் சொன்னது : கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்டு அர்ஜுனன் நடுங்கியவனாய் கை கூப்பி, நமஸ்கரித்து, பயத்துடன் வணங்கி, வாய்குளறி அவரிடம் சொன்னேன்.
11.36 : கிருஷ்ணா ! உனது மகிமையால் உலகம் மகிழ்கிறது.ஆனந்தம் அடைகிறது. ராட்சஷர்கள் பயந்து திசைகள் தோறும் ஓடுகிறார்கள். சித்தர்கள் அனைவரும் வணங்குகிறார்கள். இவையெல்லாம் உனக்கு பொருத்தமானதே.
11.37 : பரம்பொருளே ! முடிவற்றவனே ! தேவர் தலைவனே, உலகின் ஆதாரமே, பிரம்மாவிற்கும் பெரியவனே, முதர்க்காரணமானவனே, தோன்றியதும் தோன்றாததும் அப்பாற்பட்டதுமான அழியா பொருள் நீயே, உன்னை ஏன் வணங்கமாட்டார்கள்.
11.38 : நீ முழுமுதற்கடவுள், பழமைகளுக்கெல்லாம் பழமையானவன், பிரபஞ்சத்தின் மேலான இருப்பிடம், எண்ணற்ற வடிவங்கள் உடையவன். அறிபவனும் அறியபடுபவனும் நீயே, மேலான நிலையாகவும் நீயே இருக்கிறாய், உலகம் உன்னாலேயே வியாப்பிக்கபட்டிருக்கிறது.
11.39 :நீயே வாயு, எமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி மற்றும் முப்பாட்டனாக இருக்கிறாய். உனக்கு மீண்டும் மீண்டும்  நமஸ்காரம். ஆயிரம் முறை இன்னும் அதற்கு மேலும் உனக்கு நமஸ்காரங்கள்.
11.40 : எல்லமானவனே ! உனக்கு முன்னாலும் பின்னாலும் நமஸ்காரம், எல்லா பக்கத்திலும் நமஸ்காரம். நீ அளவற்ற ஆற்றலும், எல்லையற்ற பராகிரமும் உடையவன். நீ அனைத்திலும் நன்றாக வியாப்பித்திருக்கிறாய். அதனால் அனைத்துமாக இருக்கிறாய்.
11.41 -  42  : அச்சுதா ! எல்லையற்றவனே ! உனது இந்த மகிமையை அறியாமல் நண்பன் என்று கருதி, கவனமின்றியோ, அன்பினாலோ, ஏ கிருஷ்ணா, ஏ  யாதவா, ஏ  நண்பா என்று அலட்சியமாக உன்னை அழைத்திருக்கிறேன். விளையாட்டு நேரங்களிலோ, ஓய்வு வேலையிலோ, சும்மா இருக்கும் போதோ, சாப்பாட்டு வேலையிலோ, தனிமையிலோ, பிறர் காணுமாறோ அவ்வாறு உன்னை அவமதித்ததை  எல்லாம் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
11.43 : ஒப்பற்ற பெருமை உடையவனே ! அசைவதும் அசையாததும் நிறைந்த இந்த உலகின் தந்தை நீயே. பூஜிக்கதக்கவனும் மேலான குருவும் நீயே. மூன்று உலகங்களிலும் உனக்கு சமமானவர் இல்லை. உன்னை விட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
11.44 : தேவா ! இறைவனும் போற்றதக்கவனுமாகிய உன்முன்  நான் கீழே விழுந்து வணங்குகிறேன். அருள்புரிய வேண்டும். மகனை தந்தையும், நண்பனை நண்பனும், காதலியை காதலனும் பொருத்து கொள்வதுபோல் என்னை பொருத்து அருள் மாறு வேண்டுகிறேன்.
11.45 : தேவா ! தேவர் தலைவா உலகின் இருப்பிடமானவனே ! முன்பு காணாததை கண்டு மகிழ்கிறேன். ஆனாலும் பயத்தால் என் மனம் நடுங்குகிறது. ( இனிமை ததும்பும் ) அந்த பழைய உருவத்தையே எனக்கு காட்ட வேண்டும், அருள் புரிக.
11.46 :ஆயிரம் கைககள் உடையவனே, உலககெங்கும் நிறைந்த வடிவத்தை உடையவனே ! உன்னை முன் போலவே கிரீடம் தரித்தவனாக, கதை ஏன்தியவனாக, சக்கரத்தை கையில் தாங்கியவனாக  நான் தரிசிக்க விரும்புகிறேன், நான்கு கைகள் உடைய அந்த உருவத்துடனேயே இருப்பாயாக.
11.47 : பகவான் சொன்னது : அர்ஜுனா ! ஒளிமயமானதும் எங்கும் நிறைந்ததும், முடிவற்றதும், முதலில் இருந்ததுமான எனது மேலான உருவத்தை மகிழ்ச்சி காரணமாக நான் எனது யோக சக்தியில் உனக்கு காட்டினேன். உன்னை தவிர வேறு யாரும் இந்த முன்பு இதனை கண்டதில்லை.
11.48 : குரு குலத்து பெரு வீரனே ! இத்தகைய எனது விசுவ ரூபத்தை பூமியில் உன்னை தவிர வேறு யாரும் வேதங்களாலோ, யாகங்களாலோ, படிப்பாலோ, தானங்களாலோ, கிரியைகலாலோ தீவிர தவங்களாலோ காண இயலாது.
11.49 : எனது கோரமான உருவத்தை பார்த்து உனக்கு பயமோ குழப்பமோ வேண்டும். பயம் நீங்கி மன மகிழ்ச்சியுடன் எனது பழைய உருவத்தை நன்றாக பார்.
11.50 : சஞ்சயன் சொன்னது : கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இப்படி சொல்லி சொந்த உருவத்தை மீண்டும் காட்டினார். அவ்வாறு பரம்பொருளாகிய கிருஷ்ணர் மீண்டும் இனிய வடிவம் தாங்கி, பயந்த அர்ஜுனனை தேற்றினார்.
11.51 :  அர்ஜுனன் சொன்னது : கிருஷ்ணா ! உனது இந்த இனிய மனித வடிவை பார்த்து இப்போது நான் மனத்தெளிவு பெற்று இயல்பான நிலையை அடைந்து இருக்கிறேன்.
11.52 : பகவான் சொன்னது : எனது எந்த வடிவத்தை நீ கண்டிருக்கிறாயோ காண்பதற்கு அறியதான அதை எப்போதும் காண தேவர்களும் விரும்புகிறார்கள்.
11.53 : என்னை நீ எவ்வாறு கண்டிருக்கிறாயோ அவ்வாறு காண வேதங்களாலும் தவத்தாலும் தானங்களாலும் கூட முடியாது.
11.54 : எதிரிகளை வாட்டுபவனே ! அர்ஜுனா ! ஒருமுகப்பட்ட பக்தியாலேயே இவ்வாறு என்னை உள்ளபடி அறியவும் காணவும் அடையவும் முடியும்.
11.55 : அர்ஜுனா ! எனக்காக வேலை செய்பவன், என்னை கதியாகவும் கொள்பவன், எனது பக்தன், பற்றற்றவன், எந்த உயிரையும் வெருக்காதவன் யாரோ அவன் என்னை அடைகிறான்.                                      

No comments:

Post a Comment

Blogger Widgets