என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

14 . குனத்ரய விபாக யோகம் ( மூன்று குணங்கள் ) ( THREE MODES OF MATERIAL NATURE )


14 . குனத்ரய விபாக யோகம்
( மூன்று குணங்கள் )

14.1 : பகவான் சொன்னது : எதை அறிந்து, எல்லா முனிவர்களும் மேலான நிலையை அடைந்தார்களோ, ஞானங்களுள் மிக சிறந்ததும் மேலானதுமான அந்த ஞானத்தை மீண்டும் சொல்கிறேன்.
14.2 : இந்த ஞானத்தை பெற்று எனது நிலையை அடைந்தவர்கள் படைப்பின்போது பிறப்பதில்லை. பிரளய காலத்திலும் கலங்குவதில்லை.
14.3 : அர்ஜுனா ! பெரியதான மாயை எனது கருப்பை. அதில் நான் விதையை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகின்றன.
14.4 : அர்ஜுனா ! கருப்பைகளில் பிறக்கின்ற உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் பெரியதான மாயை. விதையை கொடுக்கின்ற தந்தை நான்.
14.5 : பெரிய தோள்களை உடையவனே ! மாயையிலிருந்து தோன்றிய சத்வம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களும் அழிவற்றவனான மனிதனை உடம்பில் பிணைக்கிறது.
14.6 : பாவமற்றவனே ! அவற்றுள் சத்வ குணம் களங்கம் இல்லாததால் ஒளி பொருந்தியது. கேடற்றது. சுகம் மற்றும் ஞானத்தின் மீதுள்ள பற்றின் வாயிலாக அது மனிதனை பிணைக்கிறது.
14.7 : குந்தியின் மகனே ! ரஜோ குணம் ஆசை வடிவானது. வேட்கையையும் பற்றையும் உண்டாக்குவது என்று அறிந்துகொள், செயல் மீது கொள்கின்ற பற்றுதலால் அது மனிதனை கட்டுகிறது.
14.8 : அர்ஜுனா ! தமோ குணமோ  அறியாமையில் பிறந்தது. எல்லோருக்கும் மனமயக்கம் தருவது என்று அறிந்துகொள். அது கவனமின்மை, சோம்பல், தூக்கம் ஆகியவற்றால் மனிதனை கட்டுகிறது.
14.9 : அர்ஜுனா ! சத்வ குணம் சுகத்தில் இணைக்கிறது, ரஜோ குணம் செயலில் இணைக்கிறது, தமோ குணமோ ஞானத்தை மறைத்து கவனமின்மையில் இணைக்கிறது.
14.10 : அர்ஜுனா ! சத்வ குணம் ரஜசையும் தமசையும், ரஜோ குணம் சத்வத்தையும் தமசையும், அவ்வாறே, தமோ குணம் ரஜசையும் சத்வத்தையும் அடக்கி மேலெழுகிறது.
14.11 : இந்த உடம்பின் எல்லா வாசல்களிலும் எப்போது அறிவின் ஒளி பிரகாசிக்கின்றதோ அப்போது சத்வ குணம் ஓங்கியுள்ளது என்று அறிந்துகொள்.
14.12 : அர்ஜுனா ! ரஜோ குணம் மேலெழும் போது பேராசை புறநாட்டம், கர்மங்களை ஆரம்பித்தல், கட்டுப்பாடின்மை, ஆசை ஆகியவை உண்டாகின்றன.
14.13 : குரு குலத்தில் உதித்தவனே ! தமோ குணம் மேலெழும் போது விவேகமின்மை, முயற்சியின்மை, கவனமின்மை, மனமயக்கம் ஆகியவை உண்டாகிறது.
14.14 :  சத்வ குணம் ஓங்கியிருக்கும் போது இறப்பவன் மேலான உண்மையை அறிந்தவர்கள் செல்கின்ற மாசற்ற உலகங்களை அடைகிறான்.
14.15 : ரஜோ குணம் ஓங்கிய நிலையில் இறப்பவன் செயல் நாட்டம் உடையவர்களிடம் பிறக்கிறான். தமோ குணம் ஓங்கிய நிலையில் இறப்பவன் முட்டாள்களின் கருவில் பிறக்கிறான்.
14.16 : நற்செயல்களின் பலனாக அகநாட்டமும் தூய்மையும் உண்டாகிறது. ரஜோ குண செயல்களின் பலன் துன்பம், தமோ குண செயல்களின் பலனோ அறியாமை என்கிறார்கள்.
14.17 : சத்வ குணத்திலிருந்து ஞானம் பிறக்கிறது. ரஜசிலிருந்து பேராசை பிறக்கிறது. தமசிலிருந்து அறியாமையும் கவனமினமையும் மனமயக்கமும் உண்டாகின்றன.
14.18 : சத்வ குணத்தினர் உயர் லச்சியங்களை நோக்கி போகிறார்கள். ரஜோ குணத்தினர் இடையில் நிற்கிறார்கள். இழிந்த குணமான தமோ குணத்தினர் கீழானவற்றை நாடுகிறார்கள்.
14.19 : மனிதன் குணங்களை தவிர வேறு கர்த்தாவை எப்போது காண்பதில்லையோ, குணங்களுக்கு மேலானதாக அறிகிறானோ அவன் எனது சொரூபத்தை அடைகிறான்.
14.20 : உடம்பை உண்டாக்கிய இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகிய துக்கங்களிலிருந்து விடுபட்டவன் மரணமில்லா பெருநிலையை அடைகிறான்.
14.21 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! இந்த மூன்று குணங்களையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன ? நடத்தை எப்படி இருக்கும் ? அவன் இந்த குணங்களை எவ்வாறு கடக்கிறான் ?
14.22 : பகவான் சொன்னது : அர்ஜுனா ! ஒளியும் செயலும் மனமயக்கமும் வரும் போது அவன் வெறுப்பதில்லை, வராத போது நாடுவதுமில்லை.
14.23 : யார் சாட்சி போல் இருந்துகொண்டு, குணங்களால் அலைகழிக்கபடுவதில்லையோ, குணங்களே செயல்படுகின்றன என்று உறுதியாய் இருக்கிறானோ, அந்த உறுதியில் இருந்து விலகாமல் இருக்கின்றானோ அவன் மூன்று குணங்களையும் கடந்தவன்.
14.24 : சொந்த இயல்பில் நிலைத்திருப்பவன், துன்பம்- இன்பம், மண், கல், பொன், இனியது, இனிமையற்றது, இகழ்ச்சி – புகழ்ச்சி, ஆகியவற்றை சமமாக கருதுபவன், தெளிந்த அறிவுடையவன் --- இத்தகையவன் மூன்று குணங்களையும் கடந்தவன்.
14.25 : மானத்திலும் அவமானத்திலும் சமமாக இருப்பவன், நண்பனிடமும் பகைவனிடமும் சமமாக இருப்பவன், தானாக முனைந்து செயலில் ஈடுபடுவதை தவிர்ப்பவன் குணங்களை கடந்தவன் என்று சொல்லபடுகின்றான்.
14.26 : மாறாத பக்தி யோகத்தால் யார் என்னை வழிபடுகிறானோ, அவன் இந்த குணங்களை முற்றிலும் கடந்து, இறைநிலையை அடைவதற்கு தகுதி பெறுகிறான்.
14.27 : ஏனெனில் பிரம்மத்திற்கும், அழிவற்ற மோட்ச நிலைக்கும், நிலையான தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம் நானே.          


BHAGAVAD GITA CHAPTER 14   
       

No comments:

Post a Comment

Blogger Widgets