என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

15 . புருஷோத்தம யோகம் ( வாழ்க்கை மரம் ) THE SUPREME BEING ( THE SUPREME BEING )


15 . புருஷோத்தம யோகம்
THE SUPREME BEING
( வாழ்க்கை மரம் )




15.1 : பகவான் சொன்னது : மேலே வேர் உள்ளதும் கீழே கிளைகள் உள்ளதுமாகிய அரசமரத்தை அழிவற்றதாக கூறுகின்றனர். வேதங்கள் அதன் இலைகள். அந்த மரத்தை யார் அறிகிறானோ அவன் உண்மையை அறிந்தவன்.
15.2 : அதன் கிளைகள் குணங்களால் செழிப்படைந்து, விஷயங்களாக தளிர்விட்டு கீழும் மேலும் படர்ந்து இருக்கின்றன. அதன் விழுதுகள் மானிட உலகில் செயல்களை விளைவிப்பவனாய் கீழ் நோக்கி பரவியிருக்கின்றன.
15.3 : இங்கே அதன் உருவமோ அதன் முடிவோ ஆரம்பமோ தென்படுவதில்லை. அதற்கு நிலைத்த தன்மையும் இல்லை. நன்றாக வேரூன்றிய இந்த அரச மரத்தை பற்றின்மை என்னும் திடமான வாளால் வெட்டி வீழ்த்தவேண்டும்.
15.4 : எங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லையோ அந்த இடத்தை தேடவேண்டும். ஆரம்பத்தில் படைப்பு யாரிடமிருந்து தோன்றியதோ, அந்த முதல்வனான இறைவனையே சரணடைய வேண்டும்.
15.5 : அகங்காரமும் மனமயக்கமும் நீங்கிய, பற்று என்னும் குற்றத்தை வென்ற, ஆன்ம உணர்வில் நிலை பெற்ற, ஆசைகளை விட்ட, இன்ப துன்பம் போன்ற இருமைகளிலிருந்து விடுபட்ட குழப்பம் இல்லாத மகான்கள் அழிவற்ற அந்த நிலையை அடைகின்றனர்.
15.6 : எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அது என்னுடைய மேலான இருப்பிடம், அந்த இடத்தை சூரியனும், சந்திரனும், அக்னியும் விளக்குவது இல்லை.
15.7 : எனது அம்சமே உலகில் உயிர்களாக தோன்றி என்றென்றும் இருக்கிறது. இயற்கையில் நிலைபெற்றதும் மனத்தை ஆறாவதாக உடையதுமான புலன்களை எனது அம்சமே உலக இன்பங்களை நோக்கி இழுத்து செல்கிறது.
15.8 : மனங்களுக்கு இருப்பிடமாகிய மலர்களிலிருந்து மனங்களை கிரகித்துகொண்டு காற்று செல்வது போல் ஜீவன் புதிய உடலை எடுக்கும் போதும் பழைய உடலை விடும் போதும் புலன்களையும் மனத்தையும் பற்றிக்கொண்டு போகிறான்.
15.9 : காது, கண், உடம்பு, நாக்கு, மூக்கு, மனம் இவற்றை பற்றிக்கொண்டு ஜீவன் விஷயங்களை அனுபவிக்கிறான்.
15.10 : உடலை விட்டு செல்லும் போதும், உடலுடன் இருக்கும் போதும், இன்பதுன்பங்களை அனுபவிக்கும் போதும், குணங்களுடன் கூடியவனாக இருக்கும் போதும் எந்த நிலையிலும் ஜீவனை மூடர்கள் காண்பதில்லை. புத்தி விழித்தெழ பெற்றவர்கள் காண்கிறார்கள்.
15.11 : முயற்சி செய்கின்ற யோகிகள் இந்த ஜீவனை தங்களுள் இருப்பதாக காண்கிறார்கள். மனத்தூய்மை பெறாதவர்களும் தன்னறிவற்றவர்களும் முயற்சி செய்தாலும் இதனை காண்பதில்லை.
15.12 : சூரியனில் உள்ள எந்த ஒளி உலகம் முழுவதையும் பிரகாசிக்கசெய்கிறதோ, எந்த ஒளி சந்திரனிலும் அக்னியிலும் திகழ்கிறதோ, அந்த ஒளி என்னுடையது என்று அறிவாய்.
15.13 : நான் என் சக்தியால் பூமியில் புகுந்து உயிர்களை தாங்குகிறேன். உயிர் சக்தி வடிவாகிய சந்திரனாக ஆகி மூலிகைகளை எல்லாம் வளர்கிறேன்.
15.14 : நான் உயிர்களின் உடம்பில் வைசுவாணர அக்னியாக இருந்துகொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன்.
15.15 : நான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறேன். ஆன்ம நினைவு, விழிப்புணர்வு, சந்தேகமற்ற நிலை எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. அனைத்து வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை தோற்றுவித்தவனும் வேதத்தை அறிந்தவனும் நானே.
15.16 : நிலையற்றது என்றும் நிலையானது என்றும் உலகில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தோன்றிய அனைத்தும் நிலையற்றவை என்ற பிரிவில் வருகின்றன. தோன்றிய அனைத்தின் உள்ளே இருப்பவன் நிலையானவன்.
15.17 : யார் மூன்று உலகங்களை வியாப்பித்து அவற்றை தாங்குகிறாரோ அவர் அழிவற்றவரும் தலைவரும் பரமாத்மா என்றும் சொல்லபடுபவருமான மேலான புருஷர் ஆவார். நிலையற்றவை, நிலையானவன் இருவரிலிருந்தும் வேறானவர் இவர்.
15.18 : நான் எந்த காரணத்தால் நிலையற்றதை கடந்தவனோ, நிலையானதற்கும்   மேலானவனோ அந்த காரணத்தால் உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.
15.19 : அர்ஜுனா ! யார் இவ்வாறு மனமயக்கம் இல்லாதவனாக புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவனாக என்னை முழுமனத்துடன் வழிபடுகிறான்.
15.20 : பாவம் இல்லாதவனே ! அர்ஜுனா ! மிகவும் ஆழ்ந்ததான இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது. இதை அறிந்தவன் அறிவாளியாகவும் செய்ய வேண்டியதை செய்தவனாகவும் ஆவான்.          


CHAPTER 15 BHAGAVAD GITA THE SUPREME BEING

No comments:

Post a Comment

Blogger Widgets