என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

18 . மோட்ச சன்னியாச யோகம் ( கடமை மூலம் கடவுள் ) NIRVANA THROUGH RENUNCIATION


18 . மோட்ச சன்னியாச யோகம்
NIRVANA THROUGH RENUNCIATION
( கடமை மூலம் கடவுள் )

18.1 : அர்ஜுனன் சொன்னது : தோள்வலிமை மிக்கவனே ! கிருஷ்ணா !  கேசி என்ற அசுரனை கொன்றவனே ! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும் தனித்தனியாக அறிய விரும்புகிறேன்.
18.2 : பகவான் சொன்னது : ஆசை வசப்பட்டு செய்கின்ற செயல்களை விடுவது சன்னியாசம் என்று மகான்கள் அறிகிறார்கள். செயல்களின் பலனை விட்டுவிடுவது தியாகம் என்று தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள்.
18.3 : எல்லா செயல்களும் குற்றம் உடையவை. எனவே எல்லாம் துறக்கபட வேண்டியவை என்று ஒருசிலர் கூறுகின்றனர். வழிபாடு, தானம், தவம் போன்றவற்றவை துறக்ககூடாது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
18.4 : பரதகுலத்தில் சிறந்தவனே ! தியாக விஷயத்தில் எனது உறுதியான கருத்தை கேள். ஆண்களில் புலி போன்றவனே ! தியாகம் மூன்று விதம் என்று கூறப்பட்டுள்ளது.
18.5 : வழிபாடு, தானம், தவம் ஆகிய செயல்கள் விடுவதற்கு உரியவை அல்ல. இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். இவை சான்றோர்களை( அதாவது உரிய விதத்தில் செய்பவர்களை ) புனிதபடுத்துபவை.
18.6 : அர்ஜுனா ! இந்த செயல்களையும் கூட பற்றை விட்டும் பலனை எதிர்பாராமலும் செய்ய வேண்டும் என்பது எனது உறுதியானதும் மேலானதுமான கருத்தாகும்.
18.7 : விதித்த கடமையை விடுவது சரியல்ல. மனத்தெளிவின்மை காரணமாக அவ்வாறு விடுவது தாமச தியாகம்.
18.8 : துன்பமாக இருக்கிறது என்ற காரணத்தாலும், உடம்பிற்கு தொந்தரவு என்ற பயத்தாலும் செயல்களை விடுவது ராஜச தியாகம். இந்த தியாகத்தினால் தியாகத்திற்கு உரிய பலன் கிடைப்பதில்லை.
18.9 : அர்ஜுனா ! சாதாரண செயல்களையே, அவை செய்யப்பட வேண்டியவை என்பதற்காக, பற்றையும் பலனையும் விட்டு செய்தால் அது சாத்வீக தியாகம்.
18.10 : சத்வம் நிறைந்த, உண்மையறிவுடைய, சந்தேகம் நீங்கபெற்ற, தியாக சிந்தனை உடைய ஒருவன், துன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை வெறுப்பதில்லை. இன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை விரும்புவதும் இல்லை.
18.11 : சாதாரண மனிதனால் செயல்களை அறவே விடுவது இயலாது. யார் வினைபயனை விட்டவனோ அவனே தியாகி.

18.12 : பற்றுடன் வேலை செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு இன்பமானது, துன்பமானது, இரண்டும் கலந்தது என்று மூன்று விதமான வினைபயன்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் பற்றை விட்டவர்களுக்கு ஒருபோதும் இந்த அனுபவங்கள் இல்லை.
18.13 : பெரும்தோள் உடையவனே ! கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கிய தத்துவத்தில் எல்லா கர்மங்களின் நிறைவிற்க்காக கூறப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்து கொள்.
18.14 : உடம்பு, தன்முனைப்பு, பல்வேறு உறுப்புகள், பலவிதமான செயல்பாடுகள் இவற்றுடன் ஐந்தாவதாக தேவ சக்திகள் ஆகியவையே ஒரு கர்மத்திர்க்கு நிபந்தனைகள் ஆகின்றன.
18.15 : நியாயமானதோ, அநியாயமானதோ எந்த கர்மத்தையானாலும் சரி, உடலால், வாக்கால், மனத்தால் மனிதன் தொடங்கினால் அதற்கு இந்த ஐந்தும் காரணமாக அமைகின்றன.
18.16 : அது அப்படி இருக்க, தெளிவற்ற புத்தியின் காரணமாக யார் இறைவனை கர்த்தாவாக காண்கிறானோ அந்த மூடன் உண்மையை காண்பதில்லை.
18.17 : நான் செய்கிறேன் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ, யாருடைய மனம் பற்றற்றதோ அவன் இந்த உலக உயிர்கள் அனைத்தையும் கொன்றாலும் கொன்றவன் ஆகமாட்டான். அந்த செயலால் வரும் பந்தமும் அவனுக்கு இல்லை.
18.18 :  அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்று கர்ம தூண்டுதல் மூன்று விதம். கருவி, செயல், செய்பவன் என்று செயலின் ஆதாரம் மூன்று விதம்.
18.19 : அறிவும் செயலும் செய்பவனும் குண வேறுப்பாட்டால் மூவகை என்று குணங்களை பற்றி கூறுவதான சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லபட்டுருக்கிறது. அவற்றையும் உள்ளபடி கேள்.
18.20 : வெவேறான உயிரினங்களில் வேறுபாடற்ற அழியாத ஒரே உணர்வை காண்கின்ற அறிவு சாத்வீக அறிவு.
18.21 : வெவ்வேறு உயிரினங்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறானதாக அறிகின்ற அறிவு ராஜச அறிவு.
18.22 : ஒரு பகுதியையே எல்லாம் என்று விடாபிடியாக பற்றி கொண்டு இருக்கின்ற, யுக்திக்கு பொருந்தாத, உண்மைக்கு பொருந்தாத, அற்பமான அறிவு தாமச அறிவு.
18.23 : பலனில் ஆசை வைக்காமல், பற்றின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமையை செய்வது சாத்வீக செயல்.
18.24 : ஆசை வசப்பட்டு, தன்முனைப்புடன் மிகவும் பாடுபட்டு செய்ய செய்யபடுவது ராஜச செயல்.
18.25 : செயலின் விளைவையும் நஷ்டத்தையும் துன்பத்தையும் சொந்த ஆற்றலையும் எண்ணி பாராமல் மனமயக்கத்தால் தொடங்கபடுவது தாமச செயல்.
18.26 : பற்றற்றவன், அகங்காரம் இல்லாதவன், உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் மாறுபடாதவன் சாத்வீக கர்த்தா.
18.27 : ஆசை வசபட்டவன், வினைபயனை நாடுபவன், கருமி, துன்பம் செய்பவன், தூய்மையற்றவன், மகிழ்ச்சியும் கவலையும் கொள்பவன் ராஜச கர்த்தா.
18.28 : ஒருமை படாத மனத்தினன், விவேகமற்றவன், முரடன், வஞ்சகன், பிறரது வேலையை கெடுப்பவன், சோம்பேறி, கவலையில் மூழ்கியவன், காலதாமதம் செய்பவன் தாம்ச கர்த்தா.
18.29 : புத்தி மற்றும் மன உறுதியின் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று விதமான வேறுபட்ட கண்ணோட்டங்களை தனித்தனியாக  முற்றிலும் சொல்கிறேன் கேள்.
18.30 : அர்ஜுனா ! உலகியல் வாழ்க்கை – முக்திபாதை, செய்ய தகாதது – செய்ய தக்கது, பயம் – பயமின்மை, பந்தம் – மோட்சம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது சாத்வீக புத்தி. 
18.31 : அர்ஜுனா ! தர்மத்தையும் அதர்மத்தையும் செய்ய தக்கதையும் செய்ய தகாததையும் தாறுமாறாக அறிவது ராஜச புத்தி.
18.32 : அர்ஜுனா ! அறியாமை இருளால் மூடபெற்று அதர்மத்தை தர்மம் என்றும் எல்லாவற்றையும் விபரிதமாகவும் அறிவது தமாச புத்தி.
18.33 : அர்ஜுனா ! யோக வாழ்கையின் விளைவாக வருவது சாத்வீக உறுதி. பிறழாத அந்த உறுதியால் மனம், பிராணம் மற்றும் புலன்களின் செயல்பாடுகளை ஒருவன் நெறிபடுத்துகிறான்.
18.34 : குந்தியின் மகனே அர்ஜுனா ! எந்த உறுதியால் ஒருவன் அறம், இன்பம், பொருள் இவற்றை காக்கிறானோ, மிகுந்த பற்றுதலின் காரணமாக பலனை நாடுகிறானோ அது ராஜச உறுதி.
18.35 : அர்ஜுனா ! மூடன் கொல்வது தாமச உறுதி . அந்த உறுதியால் தூக்கம், பயம், கவலை, மனக்கலக்கம், கர்வம் இவற்றை அவன் விடாபிடியாக பற்றிக்கொண்டு வாழ்கிறான்.
18.36 – 37 : அர்ஜுனா ! மூவகை இன்பங்களை கேள். சாத்வீக இன்பம் ஆன்மாவில் நிலைபெற்ற புத்தியின் தெளிவினால் கிடைப்பது. ஆரம்பத்தில் விஷம் போலவும் முடிவில் அமுதம் போன்றும் இருப்பது. தொடர்ந்த பயிற்சியால் அது துக்கம் என்பதே இல்லாமல் செய்கிறது.
18.38 : பொருட்களும் புலன்களும் தொடர்புகொள்வதன் காரணமாக வருவதும், ஆரம்பத்தில் அமுதம் போன்றும் முடிவில் விஷம் போன்றும் இருப்பதும் ராஜச இன்பம்.
18.39 : தாமச இன்பம் ஆரம்பத்திலும் முடிவிலும் மனமயக்கம் தருகிறது. துக்கம், சோம்பல், தடுமாற்றம் ஆகியவற்றிலிருந்து தோன்றுகிறது.
18.40 : இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்ட உயிரினங்கள் பூமியிலோ, சொர்க்கதிலோ, தேவலோகத்திலோ இல்லை.
18.41 : எதிரிகளை எரிப்பவனே ! மன இயல்பிலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ப பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களின் வேலைகள் பிரிக்கபட்டிருக்கின்றன.
18.42 : மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, கற்றறிவு, அனுபவ அறிவு, ஆன்ம நாட்டம் ஆகியவை இயல்பாக பிராமணனுக்கு உரியவை.
18.43 : பராக்கிரமம், மன ஆற்றல், செயல்திறன், சாதுர்யம், போரில் புறம்கட்டமை, கொடை, ஆளும் திறமை ஆகியவை இயல்பாக க்ஷத்திரியனுக்கு உரிய செயல்கள்.
18.44 : விவசாயம், மாடுகளை காத்தல், வாணிபம் ஆகியவை இயல்பாக வைசியனுக்கு உரிய செயல்கள். சூத்திரனுக்கு இயல்பானது குற்றேவல் செயல்கள்.
18.45 : தனக்குரிய கடமைகளில் இன்பம் காண்கின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். கடமையை செய்பவன் எப்படி நிறைநிலையை அடைகிறான் என்பதை கேள்.
18.46 : யாரிலிருந்து உயிர்கள் தோன்றியுள்ளனவோ, யாரால் இந்த பிரபஞ்சம் எல்லாம் வியாப்பிக்கபட்டிருக்கிறதோ அவரை தனது கடமையால் அர்ச்சித்து, மனிதன் இறைநிலையை அடைகிறான்.
18.47 : மன இயல்பிற்கு ஏற்ற வேலை நிறைவானதாக இல்லாமல் போகலாம். பிறர் வேலை நிறைவுடன் செய்ய தக்கதாக இருக்கலாம். இருப்பினும் தனக்குரிய வேலையை செய்வதே சிறந்தது. சொந்த இயல்பிற்கு ஏற்ற செயலை செய்பவன் கேட்டை அடைவதில்லை.
18.48 : குந்தியின் மகனே ! குறையுடன் கலந்ததாக இருந்தாலும் மன இயல்பிற்கேற்ப வேலையை விடக்கூடாது. ஏனெனில் நெருப்பு புகையால் சூழபட்டிருப்பது போல் எல்லா செயல்களும் குறையால் சூழப்பட்டுள்ளது.
18.49 : ( இயல்பிற்கேற்ற வேலையையும் ) முற்றிலும் பற்றற்று மனத்தை வசபடுத்தி, ஆசைகளை விட்டு செய்பவன் துறவின் மூலம் கிடைப்பதான செயலில் செயலின்மை காண்கின்ற மேலான நிலையை அடைகிறான்.
18.50 : குந்தியின் மகனே ! ( செயலில் செயலின்மை காண்கின்ற ) உயர் நிலையை அடைந்தவன் ஞானத்தின் மேலான முடிவாகிய இறைவனை எப்படி அடைகிறானோ அதை சுருக்கமாக கூறுகிறேன்.
18.51 – 53 :தூய புத்தியுடன், உறுதியாக தன்னை அடக்கி, ஒளி முதலான விஷயங்களை விட்டு, விருப்பு வெறுப்பை நீக்கி, தனிமையில் இருந்து, மிதமாக உண்டு, சொல் செயல் மனம் இவற்றை கட்டுபடுத்தி, எப்போதும் தியான யோகத்தில் திளைத்திருந்து காமம் கோபம் உடைமை இவற்றை விட்டு எனதென்பது இல்லாமல் சாந்தமாக இருப்பவன் சமகாட்சி நிலையை அடைவதற்கு தகுதி உடையவன்.        
18.54 : சமகாட்சி நிலையில் உறுதிபெற்ற, தெளிந்த மனம் உடைய அவன் கவலைபடுவதில்லை, ஆசை கொள்வதில்லை. எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கின்ற அவன் என் மீது உயர்ந்த பக்தியை அடைகிறான்.
18.55 : நான் யார், எப்படிபட்டவன் என்பதை உள்ளது உள்ளபடி பக்தியால் அவன் அறிகிறான். அவ்வாறு என்னை உள்ளபடி அறிந்த பிறகு விரைவில் என்னை அடைகிறான்.
18.56 : எப்போதும் என்னை சரணடைந்து, எல்லா வேலைகளையும் செய்பவன் நிலையான குறையற்ற நிலையை எனதருளால் அடைகிறான்.
18.57 : எல்லா வேலைகளையும் மனத்தால் என்னிடம் வைத்து, என்னையே கதியாக கொண்டு, புத்தி யோகத்தின் மூலம் எப்போதும் என்னில் நிலைபெற்றவனாக ஆவாய்.
18.58 : என்னில் மனத்தை வைத்தால் எல்லா தடைகளையும் எனதருளால் தாண்டி செல்வாய். மாறாக அகங்காரத்தின் காரணமாக என் பேச்சை கேட்காவிட்டால் அழிவாய்.
18.59 : அகங்காரத்தின் வசப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நினைத்தால் உனது அந்த முடிவு வீணானது. உன் மன இயல்பே உன்னை போரில் ஈடுபடுத்தி விடும்.
18.60 : குந்தியின் மகனே ! எதை செய்வதற்கு மனகுழப்பத்தின் காரணமாக தயங்குகிறாயோ, அதையே மன இயல்பின் காரணமாக தோன்றிய வினைபயனால் கட்டுண்டு, தன்வசம் இல்லாமல் செய்வாய்.
18.61 : அர்ஜுனா ! இறைவன் எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கிறார். எல்லா உயிர்களையும் தனது சக்தியால் எந்திரத்தில் சுழற்றுவது போல் ஆட்டி வைக்கிறார்.
18.62 : அர்ஜுனா ! இறைவனையே எல்லா விதத்திலும் சரணடை. அவரது அருளால் மேலான அமைதியையும் அழிவற்ற நிலையையும் அடைவாய்.
18.63 : ரகசியங்களுள் மேலான ரகசியத்தை இவ்வாறு நான் உனக்கு சொன்னேன். இதை நன்றாக ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய்.
18.64 : அனைத்திலும் ரகசியமான எனது மேலான அறிவுரையை மீண்டும் கேள். எனது உற்ற நண்பனாக இருக்கிறாய் அதனால் உனக்கு நல்லதை சொல்கிறேன்.
18.65 : என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ.
18.66 : எல்லா கர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே.
18.67 : தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன் – இவர்களுக்கு ஒரு போதும் நீ இந்த கீதா உபதேசத்தை சொல்ல கூடாது.
18.68 : யார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்கு சொல்கிறானோ, என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகமில்லாமல் என்னையே அடைகிறான்.
18.69 : மனிதர்களுள் எனக்கு மிகவும் பிரியமானதை செய்பவனும் மிகவும் பிரியமானவனும் அவனை விட வேறு யாரும் இல்லை. இருக்கவும் மாட்டான்.
18.70 : தர்மபரமான இந்த நமது உரையாடலை யார் படிக்கிறானோ அவன் என்னை அறிவு வேள்வியால் வழிப்பட்டவன் ஆவான். இது எனது கருத்து.
18.71 : இதனை அவமதிக்காமல், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையோடு ஒருவன் கேட்டால் அவனும் முக்தனாகி புண்ணியம் செய்தவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைவான்.
18.72 : அர்ஜுனா ! இதனை நீ ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்டாயா ? தனஞ்சயா ! அறியாமையிலிருந்து தோன்றியதான உனது மனக்குழப்பம் தெளிந்ததா ?
18.73 : அர்ஜுனன் சொன்னது : கிருஷ்ணா ! உனதருளால் என் மனமயக்கம் ஒழிந்தது. சுயநினைவு வந்தது. சந்தேகங்கள் விலகின . என் மனம் உறுதி பெற்று விட்டது. உனது சொற்படியே செய்கிறேன்.
18.74 : சஞ்சயன் சொன்னது : இவ்வாறு கிருஷ்ணருக்கும் சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கும் நடைபெற்றதும் மயிர்கூச்செரிவதும் அற்புதமானதுமான உரையாடலை நான் கேட்டேன்.
18.75 : இந்த மேலான சிறந்த யோகத்தை யோகேசுவரனாகிய கிருஷ்ணர் தாமே சொல்வதை வியாசரின் அருளால் நான் நேரடியாக கேட்டேன்.
18.76 : மன்னா ! கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த இந்த புண்ணியமான அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.
18.77 : மன்னா ! ஹரியின் அந்த அற்புத வடிவத்தை எண்ணியெண்ணி எனக்கு பெரும் வியப்பு உண்டாகிறது. நான் மேலும் மேலும் களிப்படைகிறேன்.
18.78 : யோகேசுவரனாகிய கிருஷ்ணரும் வில்லை தாங்கிய அர்ஜுனனும் எங்கே உள்ளார்களோ அங்கே செல்வமும் வெற்றியும் வளமும் நீதியும் நிலைத்திருக்கும். இது எனது கருத்து.       


CHAPTER 18 : BHAGAVAD GITA NIRVANA THROUGH RENUNCIATION       

No comments:

Post a Comment

Blogger Widgets