என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

6 . தியான யோகம் ( மனத்தை வசபடுத்து ) ( PATH OF MEDITATION )
6 . தியான யோகம்

( மனத்தை வசபடுத்து )

6.1 : பகவான் சொன்னது : செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .
6.2 : அர்ஜுனா ! எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.
6.3 : தியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.  
6.4 : எப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.
6.5 : உன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்.
6.6 : தன்னை வென்றவன் தனக்கு நண்பன் , தன்னை வெல்லாதவன் தனக்கு தானே பகைவன் போல் பகைமையில் இருக்கிறான்.
6.7 : தன்னை வென்றவனுக்கு , மனம் தெளிந்தவனுக்கு, குளிர் – சூடு, இன்பம் – துன்பம், மானம் – அவமானம் போன்ற இருமைகளில் இறைவுணர்வு நிலைத்திருக்கும்.
6.8 : ஞான, விஞ்ஞான அனுபவங்களின் வாயிலாக திருப்தி அடைந்தவன், மனச்சஞ்சலம் இல்லாதவன், புலன்களை வென்றவன், மண், கல், பொன் இவற்றை சமமாக பார்ப்பான்.— இத்தகையவன் யோகி என்று சொல்லபடுகின்றான்.
6.9 : நல்ல உள்ளம் படைத்தவன், நண்பன், பகைவன், ஒதுங்கி இருப்பவன், நடுநிலை வகிப்பவன், வெறுப்புக்கு உரியவன், உறவினர், நல்லவன், பாவி என்று அனைவரிடமும் சமபுத்தியை உடையவன் மேலானவன் .
6.10 : தியான யோகத்தை நாடுபவன் யாரும் காணாமல் தனியாக இருந்துகொண்டு, புலன்களையும் உடம்பையும் வசபடுத்தி, ஆசைகளை விட்டு உடைமைகள் எதுவும் இல்லாதவனாக மனத்தை ஒன்று திரட்ட வேண்டும்.
6.11 – 12 : அசையாததும், அதிக உயரமாகவோ அதிகம் தாழ்ந்ததாகவோ அல்லாததும், துணி, தோல், தர்ப்பைப்புல்  இவற்றை மேலே உடையதுமான இருக்கை ஒன்றை ஒரு சுத்தமான இடத்தில் தனக்காக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதில் அமர்ந்து மனத்தை ஒருமைபடுத்தி, பொறிபுலன்களின் செயல்களை அடக்கி, மனத்தூய்மைக்காக தியான யோகம் பழக வேண்டும்.
6.13 : உடம்பு, தலை, கழுத்து இவற்றை நேராகவும் அசையாமலும் வைத்து கொண்டு, உறுதியாக அமர்ந்து, சற்று முற்றும் பார்க்காமல் தன்னுடைய மூக்கு நுனியை பார்க்க வேண்டும்.
6.14 : என்னை குறிக்கோளாக கொண்டு அமைதியான உள்ளத்துடன், பயமின்றி, பிரம்மச்சரிய விரதத்துடன் மனத்தை வசபடுத்தி என்னிடம் வைத்து, ஆர்வத்துடன் அமர்ந்திருக்க வேண்டும்.       
6.15 : இவ்வாறு மனத்தை ஒன்று திரட்டி, அதனை வசபடுத்திய யோகி, என்னிடம் உள்ளதும் முக்தியில் நிறைவுருவதுமான அமைதியை அடைகிறான்.
6.16 : அர்ஜுனா ! அதிகமாக உண்பவனுக்கு தியான யோகம் இல்லை, எதுவும் உன்னதவனுக்கும் இல்லை, அதிகமாக உறங்குபவனுக்கும் இல்லை, அதிகமாக விழித்திருப்பவனுக்கும் இல்லை.
6.17 : உணவிலும் உடற்பயிற்சியிலும் அளவுடன் இருப்பவனுக்கு, செயல்களில் அளவுடன் ஈடுபடுபவனுக்கு, உறங்குவதிலும் விழித்திருப்பதிலும் அளவுடன் இருப்பவனுக்கு தியான யோகம் துன்பத்தை  போக்குவது ஆகிறது.
6.18 : யாருடைய மனம் எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, நன்றாக வசபடுத்தபட்டு ஆன்மாவிலேயே நிலைபெருகிறதோ அவன் தியான யோகி என்று சொல்லபடுகிறான்.
6.19 : ஆன்ம தியானம் செய்கின்ற தியான யோகியின் அடங்கிய மனத்திற்கு காற்றில்லாத இடத்தில் இருக்கின்ற தீப சுடர் உவமையாக சொல்லபடுகிறது.
6.20 : தியானத்தால் வசபடுத்தபட்ட மனம் எப்போது ஓய்வு பெறுகிறதோ, எப்போது புத்தியால் ஆன்மாவை காண்கிறானோ, அப்போது அவன் ஆன்மாவில் மகிழ்கிறான்.
6.21 : புத்தியால் அறிய தக்கதும், புலன்களுக்கு அப்பாற்பட்டதும், முடிவில்லாததுமான இன்பம் எதுவோ அதனை தியான யோகி அறிகிறான். அதில் நிலைபெற்று, அந்த ஆன்மாவிலிருந்து விலகாதிருக்கிறான்.
6.22 – 23 : எதை அடைந்த பிறகு அதைவிட அதிகமான வேறு லாபத்தை நினைப்பதில்லையோ, எதில் நிலைபெருவதால் மிக பெரிய துக்கத்தாலும் அலைகழிக்கபடுவதில்லையோ, துக்கத்தின் தொடர்பற்ற அதுவே தியான யோகம் என்று அறிந்துகொள். அந்த யோகத்தை உறுதியுடன் கலங்காத நெஞ்சத்துடனும்  செய்ய வேண்டும்.
6.24 – 25  : சங்கல்பதிலிருந்து தோன்றுகின்ற ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் விட்டு, புலன்களை மனத்தால் எல்லா பக்கங்களிலிருந்தும் நன்றாக கட்டுபடுத்தி , உறுதியுடன் கூடிய புத்தியால் மனத்தை ஆன்மாவில் நிலைபெற செய்து சிறுது சிறிதாக ஓய்வு பெற வேண்டும் . வேறு எதையும் நினைக்க கூடாது.

6.26 : அலைபாய்வதும், ஒரு நிலையில் நிற்காததுமான மனத்தை, அது எந்தெந்த காரணங்களால் அலைகிறதோ, அவற்றிலிருந்து மீட்டு ஆன்மாவில் கொண்டு வர வேண்டும்.
6.27 : மிகவும் சாந்தமான மனத்தை உடைய, ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, தூய, இறை நிலையில் இருக்கின்ற இத்தகைய தியான யோகியை தான் மிக மேலான இன்பம் வந்தடைகிறது.
6.28 : இவ்வாறு எப்போதும் ஆன்மாவில் ஒருமைப்பட்டு புனிதம் பெற்ற யோகி, இறைவனின் தொடர்பால் வருகின்ற முடிவற்ற இன்பத்தை எளிதில் அடைகின்றான்.
6.29 : யோகத்தில் நிலைபெற்ற எல்லாவற்றிலும் சமநோக்கு உடைய ஒருவன் தன்னை எல்லா உயிர்களிலும், தன்னிடம் எல்லா உயிர்களையும் காண்கின்றான்.
6.30 : யார் என்னை எல்லாவற்றிலும் , எல்லாவற்றை என்னிலும் காண்கின்றானோ அவனுக்கு நான் மறைவதில்லை, அவனும் எனக்கு மறைவதில்லை.
6.31 : எல்லா உயிர்களிலும் இருக்கின்ற என்னை ஒரே இறைவனாக கண்டு , அதில் நிலைத்திருந்து யார் வழிபடுகிறானோ, அந்த யோகி எந்த நிலையில் இருந்தாலும் என்னிடமே இருக்கிறான்.
6.32 : அர்ஜுனா ! அனைத்தையும் தன்னை போல் கருதி, சுகத்தையும் துக்கத்தையும் யார் சமமாக காண்கின்றானோ அந்த யோகி மேலானவனாக கருதபடுகிறான்.
6.33 : அர்ஜுனன் சொன்னது : கிருஷ்ணா ! என் மனம் சஞ்சலமாக உள்ளது. எனவே நீ கூறிய சமநோக்கு என்ற யோகம் என்னில் உறுதியாக நிலைக்கும் என்று தோணவில்லை.
6.34 : கிருஷ்ணா ! மனம் அலைபாயும் தன்மை உடையது, கலக்கம் தருவது, மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. மனத்தை வசபடுத்துவது காற்றை கட்டுபடுத்துவது போல் கடினம் என்று தோன்றுகிறது.
6.35 : பகவான் சொன்னது : பெரிய தோள்களை உடையவனே ! குந்தியின் மகனே ! மனம் அடக்க முடியாதது, அலைபாயகூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை வசபடுத்திவிடலாம்.
6.36 : மனத்தை வசபடுத்தமுடியாதவனால் தியான யோக நிலையை அடைய முடியாது. ( வைராக்கியம் கலந்த பயிற்சி என்கின்ற ) வழியில் மனத்தை வசபடுத்தி, முயற்சி செய்பவனால் அது முடியும் என்பது எனது கருத்து.
6.37 : அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! மனசஞ்சலத்தின் காரணமாக ஒருவன் தனது பயிற்சிகளை சரிவர செய்யவில்லை. அதன் காரணமாக அவனால் நிறைநிலையை அடைய முடியவில்லை. ஆனால் அவனிடம் சிரத்தை உள்ளது. அத்தகையவனின் கதி என்ன ?
6.38 : கிருஷ்ணா ! இறைநெறியில் தவறியவன் ஆதாரம் இல்லாமல் ( இம்மை, மறுமை ) இரண்டும் கிடைக்காமல் சிதறிய மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா ?
6.39 : கிருஷ்ணா ! எனது இந்த சந்தேகத்திற்கு குறைவின்றி விளக்க தகுந்தவன் நீயே. இந்த சந்தேகத்தை விளக்குவதற்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை.
6.40 : பகவான் சொன்னது : அர்ஜுனா ! ( இறைநெறியிலிருந்து வழுவ நேர்ந்தாலும் ) அவனுக்கு இங்கோ மறு உலகிலோ அழிவு என்பதே இல்லை. மகனே ! நன்மை செய்கின்ற யாரும் இழிநிலையை அடைவதில்லை.
6.41 : இறைநெறியிலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்கள் இருக்கின்ற உலகங்களை அடைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பிறகு, செல்வம் நிறைந்த நல்லவர்களின் வீட்டில் பிறக்கிறான்.
6.42 : அல்லது அறிஞர்களாகிய யோகிகளின் குலத்தில் பிறக்கின்றான். இது போன்ற பிறவி உலகில் மிகவும் அரியது.
6.43 : குரு வம்சத்தில் பிறந்தவனே ! முற்பிறவியில் கிடைத்த அறிவும் அந்த பிறவியில் அவனுடனேயே இருக்கிறது. எனவே நிறைநிலையை அடைவதற்கு அதிக முயற்சி செய்கிறான்.
6.44 : அவன் முயற்சி செய்யாவிட்டாலும் முற்பிறவியின் பயிற்சியாலேயே இழக்கபடுகிறான். யோகத்தின் ஆரம்ப நிலை சாதகன் கூட வினைபயனை கடந்து விடுகிறான்.
6.45 : மிகவும் பாடுபட்டு சுயமுற்சியுடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற யோகி அதன் பிறகு குறைகள் நீங்க, பல பிறவிகளில் தொடர்ந்த முயற்சிகளின் நிறைவை பெற்று மேலான நிலையை அடைகிறான்.
6.46 : தியான யோகி தபஷ்விகளை விட அறிஞர்களை விட செயலில் ஈடுபடுபவர்களை விட மேலானவான், எனவே அர்ஜுனா யோகி ஆவாய்.
6.47  : யார் செயல்திறன் கலந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுகிறானோ, அவன் எல்லா யோகிகளையும் விட மேலானவன் என்பது என் கருத்து.

விளக்கம்

தியான யோகம் அதாவது மனத்தை அமைதியாக்குதல். அலைபாயும் தன்மையுடைய மனத்தை அடக்கி ஆளுதல். எவ்வாறு இதை அடைய முடியும். அனைத்து கடமைகளையும் / வேலைகளையும் செய்து கொண்டே ஆனால் எந்த வித ஆசையும் இல்லாமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கின்ற ஒருவனின் மனநிலை தானாகவே மன அமைதியை பெரும். சஞ்சலங்கள் இல்லாமல் இருக்கும்.
இந்த நிலையை அடைந்த ஒருவன் நிரந்தரமான அந்த ஆன்மாவை கண்டு மன அமைதியை பெறுவான். இவ்வாறு வெறுப்பு விருப்பு எந்தவித செயல்களிலும் நிகழ்வுகளிலும் இல்லாத ஒருவன் எப்போதும்  இறையுணர்வில் இருப்பான். அதாவது சூடு – குளிர், நண்பன் – பகைவன், இன்பம் – துன்பம் இது போன்ற இருமைகளில் சமமாக இருப்பான்.
மேலும் தியான யோகம் பழக வேண்டும் என்றால் மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு சென்று சற்று உயரமான இருப்பிடம் அமைத்து அதன் மீது நேராக அமர்ந்து அமைதியாக இருந்து மனத்தை எதிலும் அலைபாய விடாமல் புத்தியால் தனது உள்ளே இருக்கும் ஆன்மாவை காண முயல வேண்டும். இவ்வாறு கண்டுவிட்டால் அதை விட மேலான இன்பம் எதுவும் இல்லை என்பது புரிந்து விடும். இப்படி தியானம் செய்ய வேண்டும் என்றால் அளவாக உண்ணவும் உறங்கவும் வேண்டும்.
இப்படி தியான நிலையை அடைந்து விட்டால் எல்லா உயிர்களிலும் ஆன்ம வடிவில் இருப்பது பகவான் என்பது புரிந்துவிடும். எல்லா உயிர்களிடமும் அன்பாக நடந்து கொள்வான். அனைத்துமே இறைவனின் வடிவம் என்பது புரிந்துவிடும். மேலும் இந்த பிறவியில் ஒருவன் நல்ல காரியங்கள் பல செய்து தியானம் செய்து இறைநிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கும் போது இறந்துவிட்டால் அவன் மீண்டும் நல்லோர்கள் மத்தியில் பிறந்து முற்பிறவியில் பாதியில் விட்ட முயற்சியை மீண்டும் தொடர்ந்து செய்து அவன் இறைவனை அடைவான். ஒரு பிறவியிலிருந்து மருபிறவிக்கு செல்லும் போது முந்தய பிறவியின் குணமும் சேர்ந்தே வரும். பூவில் உள்ள மனம் காற்றோடு சேர்ந்து செல்வது போல் மனிதன் இறக்கும் போது அவனுடைய குணமும் ஆன்மாவோடு செல்லும். மறுபிறவியை அதனுடன்  தொடருவான்.
*** முற்றும் ***
              
No comments:

Post a Comment

Blogger Widgets