என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

8. அக்ஷர ப்ரஹ்ம யோகம் ( மரணத்திற்கு பின்னால் ) ( THE ETERNAL BRAHMA )


8. அக்ஷர ப்ரஹ்ம யோகம்

( மரணத்திற்கு பின்னால் )


8.1 : அர்ஜுனன் கேட்டது : மனிதருள் சிறந்தவனே ! பிரம்மம் எது ? ஆன்மா எது ? அதிபூதம் எது ? அதிதெய்வம் என்று எது சொல்லபடுகிறது ?
8.2 : கிருஷ்ணா ! இந்த உடம்பில் அதியஜ்ஞன் யார் ? அவர் எப்படி இருக்கிறார்?, சுயகட்டுப்பாடு உடையவர்கள் மரண காலத்திலும் உன்னை எப்படி நினைக்கிறார்கள் ?
8.3 : பகவான் சொன்னது : பிரம்மம் அழிவற்றது, மேலானது, அதன் இயல்பு ஆன்மா என்று சொல்லபடுகிறது. உயிர்களை உண்டாக்கி வளர செய்வதாகிய வேள்வி கர்மம் எனபடுகிறது.
8.4 :  உடல் தரித்தவர்களுள் உயர்தவனே ! அழியும் பொருள் அதிபூதம் எனபடுகிறது. உடம்பில் உறைபவன் அதிதெய்வம், இந்த உடம்பில் அதியஜ்ஞமாக நானே இருக்கின்றேன்.
8.5 : மரண காலத்தில் யார் என்னையே நினைத்தவாறு உடம்பை விட்டு செல்கிறானோ அவன் என் நிலையை அடைகின்றான். இதில் சந்தேகம் இல்லை.
8.6 : குந்தியின் மகனே ! இறுதி காலத்தில் எந்த பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகின்றானோ, எப்போதும் அந்த பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகின்றான்.
8.7 : எப்போதும் என்னை நினைத்தவாறு போர் செய், என்னிடம் மனத்தையும் புத்தியையும் சமர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.
8.8 : அர்ஜுனா ! மனத்தால் வேறு எதையும் நாடாமல் மேலான ஒளிமயமான இறைவனை இடைவிடாமல் தியானிப்பவன் அவரை அடைகிறான்.
8.9 – 10 : எல்லாம் அறிந்தவனை, ஆதிபரம்பொருளை, அனைத்தையும் ஆள்பவனை, அனுவைவிட நுண்ணியவனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவம் உடையவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, புருவ நடுவில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, பக்தியுடனும் யோக ஆற்றலுடனும், அசைவற்ற மனத்துடன் மரண காலத்தில் யார் நினைகின்றானோ அவன் அந்த ஒளிமிக்க மேலான இறைவனையே அடைகிறான்.
8.11 : வேதத்தை அறிந்தவர்கள் எதை ஓங்காரம் என்கிறார்களோ, பற்று நீங்கிய துறவிகள் எதை அடைகிறார்களோ, எதை விரும்புபவர்கள் பிரம்சரியத்தை கடைபிடிக்கிறார்களோ அந்த மந்திரத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
8.12 – 13  : உடம்பின் வாசல்கள் அனைத்தையும் அடக்கி, மனத்தை இதயத்தில் நிறுத்தி, பிராணனை உச்சந்தலையில் குவித்து, யோக தாரணியில் நிலைபெற்று, பிரமம்மாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தை உச்சரித்துகொண்டு, என்னை நினைத்தவாறு உடம்பை விட்டு யார் போகிறானோ அவன் மேலான நிலையை அடைகிறான்.
8.14 : அர்ஜுனா ! வேறு எண்ணம் இல்லாமல் நீண்ட காலம் என்னை யார் எப்போதும் நினைக்கிறானோ, ஒருமுகப்பட்ட நிலையில் நிலைபெற்ற அந்த யோகிக்கு நான் எளிதில் அகபடுகிறேன்.
8.15 : உயர்ந்த பக்குவம் பெற்ற மகான்கள் என்னை அடைந்து துக்கத்தின் இருப்பிடமும் நிலையற்றதுமாகிய பிறவியை மீண்டும் அடைவதில்லை.
8.16 : அர்ஜுனா ! பிரம்மலோகம் வரையுள்ள அனைத்து உலகங்களில் இருப்பவர்களும் மீண்டும் பிறந்தேயாக  வேண்டும்.குந்தியின் மகனே ! என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.  
8.17 : ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் பகல், ஆயிரம் யுகங்கள் இரவு, இதனை அறிபவர்கள் பகலையும் இரவையும் அறிந்தவர்கள்.

உலகத்தின் ஆரம்பம் மற்றும் அழிவின் கணக்கீடு

மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள்
( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் )
( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் )
365 தேவர்களின் நாள்             = 1 தேவர்களின் வருடம்
4800 தேவர்களின் வருடம்  = கிருத யுகம் / சத்ய யுகம்
3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம்
2400 தேவர்களின் வருடம்  = துவப்பார யுகம்
1200 தேவர்களின் வருடம்  = கலி யுகம்
12000 தேவர்களின் வருடம்  = 1 சதூர் யுகம்

1000 சதூர் யுகம் =  பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது
1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது
14  மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள்
ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம்
பிரம்மா வின் ஒரு பகல்  + பிரம்மா வின் ஒரு இரவு  = பிரம்மா வின் ஒரு நாள்
பிரம்மா வின் 365 நாட்கள்     = பிரம்மா வின் ஒரு வருடம்
பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள்
பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின்  அழிவு )
பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான்  விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும்.
கல்பம் / உருவாக்கம்  = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன்   மனித வருடங்கள்
ப்ரலயம் / அழிவு  = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது  = 4320 மில்லியன் மனித வருடங்கள்
நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை  நடப்பது ஒரு கல்பம் ஆகும்.
சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள்
திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள்
துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள்
கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள்
ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும்.
ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான். } 

8.18 : ( பிரம்மாவின் ) பகல் வரும் போது தோன்றா நிலையிலிருந்து (பிரபஞ்சம் முதலான ) எல்லா தோற்றங்களும் வெளிபடுகின்றன. இரவு வரும் போது அவ்யக்தம் என்ற பெயருடைய அதன் உள்ளேயே ஒடுங்குகிறது.
8.19 : அர்ஜுனா ! உயிர் கூட்டம் தன்வசமின்றி பிறந்து பிறந்து இரவு வரும் போது ஒடுங்குகின்றன. பகல் வரும் போது வெளிபடுகின்றன.
8.20 : தோன்றா நிலையில் உள்ள இந்த படைப்பை விட மேலானதாக, வேறானதாக, தோன்றாததாக, அழிவற்றதாக யார் உள்ளாரோ, அவர் எல்லா உயிர்களும் அழிந்தாலும் அழிவதில்லை.
8.21 : தோன்றாதவர், அழிவற்றவர், என்று சொல்லபடுகின்ற அவரை அடைவதை மேலான நிலை என்று சொல்கின்றனர். எதை அடைந்து திரும்பி வருவதில்லையோ அது எனது மேலான இருப்பிடம்.
8.22 : அர்ஜுனா ! உயிர்கள் யாருள் இருக்கின்றனவோ, யாரால் இவை அனைத்தும் வியாப்பிக்கபட்டு இருக்கின்றனவோ அந்த மேலான இறைவன் வேறு நோக்கமற்ற பக்தியால் அடையபடுகிறார்.
8.23 : பரத குல பெருமகனே ! எந்த காலத்தில் இறக்கின்ற யோகிகள் திரும்பி வரமாட்டார்கள், எந்த காலத்தில் இறப்பவர்கள் திரும்பி வருவார்கள் என்கிற விவரத்தை உனக்கு சொல்கிறேன் .
8.24 : தீ, சுடர், பகல், வளர்பிறை காலம், ஆறு மாத காலமாகிய உத்தராயணம் –இந்த வேளையில் உடலை விட்டு போகின்ற பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை அடைகிறார்கள்.
8.25 : புகை, இரவு, தேய்பிறை காலம், ஆறு மாத காலமாகிய தட்சிணாயணம் –இந்த வேளையில் உடலை விட்டு போகின்ற யோகி சந்திர ஒளியை அடைந்து திரும்பி வருகிறான்.
8.26 : ஒளியும் இருளுமாகிய இந்த வழிகள் உலகில் என்றென்றும் உள்ளவை என்று கருதபடுகின்றன. ஒன்றினால் பிரவமையை அடைகின்றான். மற்றொன்றினால் மீண்டும் பிறக்கிறான்.
8.27 : குந்தியின் மகனே அர்ஜுனா ! இந்த இரண்டு வழிகளையும் அறிகின்ற எந்த யோகியும் குழப்பம் அடைவதில்லை. ஆகையால் எப்போதும் யோகத்தில் நிலைபெற்றவனாக ஆவாய்.
8.28 : வேதங்களை படிப்பதற்கும், வேள்விகள் செய்வதற்கும், தவத்திற்கும், தானத்திற்கும் எந்த புண்ணிய பலன் சொல்லபட்டிருக்கிறதோ, யோகி அவற்றை அறிந்து, அவற்றையெல்லாம் கடந்து செல்கிறான். ஆதியும் மேலானதுமான இடத்தை அடைகிறான்.


விளக்கம்

மனித உடல் அதிபூதம் என்று அழைக்கபடுகிறது. இது அழியும் தன்மை உடையது. அதன் உள்ளே இருக்கின்ற ஆத்மா ( இறைவன் ) அழியமாட்டார். மனிதன் இறக்கும் போது எதை நினைத்தவாறு இறக்கிறானோ அதையே அடுத்த பிறவியில் அடைகிறான். இறைவனையே நினைத்தவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக இறைவனையே அடைகிறான். எந்த வேலை செய்தாலும் மனதளவில் இறைவனை நினைத்தவாறு செய்பவன் இறைவனையே அடைகிறான்.
மேலும் நமது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுபடுத்தி மனத்தை நிலைநிறுத்தி மூச்சை (அல்லது ) பிராணனை உச்சந்தலையில் குவித்து “ஓம்” என்ற மந்திரத்தை சொன்னவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக மேலான நிலையை அடைகிறான்.
இந்த உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்றால், முதலில் பகவான் நாராயணன் பிரம்ம தேவனை உருவாக்கினார். பிறகு பிரம்ம தேவனுக்கு தெய்வீக அறிவுகளை புகட்டி உயிரினங்களை உருவாக்குமாறு கூறினார். அதன்படி பிரம்மன் அவருடைய பகல் பொழுதில் உயிரினங்களை உருவாக்குவார். இரவு வரும் போது அவர் உருவாக்கத்தை நிறுத்திவிடுவார். அந்த இரவின் போது உலக அழிவு ஏற்படும். அனைத்து உயிரினங்களும் அழிவு நோக்கி செல்லும். மீண்டும் பகல் வரும்போது அவர் உருவாக்கத்தை ஆரம்பிப்பார். இவ்வாறு உயிரின கூட்டம் எந்த வித சுயகட்டுபாடும் இல்லாமல் உருவாகியும் அழிந்தும் போகின்றன. இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பிறப்பு – இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். அதாவது பிறப்பு – இறப்பு இல்லாத அந்த தெய்வீக லோகத்தை அதாவது பிரம்மத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் உத்தராயனத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பது இல்லை. தட்சினாயனத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள்.  


*** முற்றும் ***

No comments:

Post a Comment

Blogger Widgets