என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Saturday, February 25, 2012

சிவராத்திரி - SHIVA RATHIRIசிவராத்திரி:
பிரளயம் ஏற்படும் நாளில் உலகின் அனைத்து உயிர்களும் சிவபெருமானின் காலில் ஒடுங்குகின்றன. பிரளய காலத்தில் பார்வதி தேவியார் உலக உயிர்களை காக்க வேண்டி தவம் இருந்து இறைவனை பூஜிக்கிறார். அந்த நாளே சிவராத்திரி. பின்னர் பிரளயம் ஓய்ந்து படைப்பு தொடங்கியது. தான் பூஜித்த சிவராத்திரி நன்னாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளும் வழங்க வேண்டும் என்று பார்வதி தேவி கேட்டுக்கொள்ள, அவ்வாறே அருள்கிறார் சிவபெருமான் என்பது புராணம்.


யார் பெரியவர் என்று சண்டையிட்ட பிரம்மா, விஷ்ணுவின் கர்வத்தை அடக்க அடி முடி தெரியாமல் வானுக்கும் பாதாளத்துக்கும் ஜோதி சொரூபனாக சிவபெருமான் நின்ற தினம் திருக்கார்த்திகை. அவர்கள் தவறை உணர்ந்து வேண்ட, சிவபெருமான் லிங்க ரூபமாக தோன்றி அருளிய நாளே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று ஆண்டு முழுவதும் இது கொண்டாடப்படுகிறது.


தினமும் வரும் இரவு நித்ய சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் வரும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி மாத சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை முதல் சதுர்த்தசி வரை 13 நாட்கள் பட்ச சிவராத்திரி. திங்கள் கிழமையில் இரவு பகல் முழுவதும் அமாவாசை இருந்தால் யோக சிவராத்திரி. இவற்றில் சிறப்பானதாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி இரவான மஹா சிவராத்திரி.


சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு இன்றைய தினம் இரவு தொடங்கி விடிய விடிய அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். மிகவும் சக்தி வாய்ந்த, சொல்வதற்கு எளிமையான நமசிவாயஎனப்படும் பஞ்சாட்சர மந்திரம், வேத மந்திரங்கள், சிவன் பாடல்கள் பாடியபடியே இன்றைய தினம் இரவு கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் அபிஷேகங்களையும் தரிசிப்பது சிறப்பு. வெறுமனே கண் விழித்திருப்பதால் மட்டுமே பயனில்லை. விழித்திருக்கும் நேரம் முழுவதும் பக்தியிலும் சிவ வழிபாட்டிலும் நாட்டம் செலுத்துவது மட்டுமே பயனைத் தரும்.


நாள் முழுக்க அபிஷேங்கள் நடந்துகொண்டிருக்கும் சிவபெருமானுக்கு வெப்பத்தை தருவது வில்வ இலை. மூன்று தளம் கொண்ட வில்வ இலை முக்கண்ணன் சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி நாளில் வில்வ இலைகளால் சிவனை பூஜிப்பது மூன்று ஜென்ம பாவங்களை போக்கும், லட்சுமி கடாட்சம் தரும் என்பது ஐதீகம். இரவு விழித்திருந்து நான்கு கால பூஜைகளையும் அபிஷேங்களையும் தரிசித்து சிவன் அருள் பெறுவோமாக

No comments:

Post a Comment

Blogger Widgets