என்னை தொடர்பவர்கள்

Google+ Followers

Thursday, February 16, 2012

Risabam sani : எதையும் ஆற அமர யோசித்து

Risabam sani  எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்திற்கு அஞ்சி, நேர்பாதையில் செல்வீர்கள்.
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பல்வேறு தொல்லைகளையும் கஷ்டங்களையும் கொடுத்து வந்தாரே. சாதகமாக முடியவேண்டிய சில வேலைகளைக்கூட போராடி முடிக்க வேண்டியதானதே. குடும்பத்தில் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமல் தவித்தீர்களே.

தொழிலில் முடக்கம், அதனை சமாளிக்க ஒரு கடன், அதனை அடைக்க இன்னொரு கடன் என்று உங்களின் கடன் பட்டியலும் நீண்டு கொண்டே போனதே. இவ்வாறு பல வகைகளில் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் 6ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித் தருவார்.
எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும் கோபத்துடன் காணப்பட்டீர்களே! இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தயக்கம் இருந்து வந்ததே, இனி உங்களின் வாழ்க்கைப் பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும்.

சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டீர்களே! இனி பக்குவமாகப் பேசி பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். எதையோ இழந்ததைப்போல் உள்ள உங்கள் முகம் இனி தெளிவடையும். உடம்பு தூங்கினாலும், மூளை தூங்காமல் இருந்ததே! இனி நல்ல தூக்கம் வரும். வசதி வாய்ப்புகள் அதிகமிருந்து பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பெரிதும் பாதித்ததே, இனி கவலை வேண்டாம். அழகும் அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களால், கெட்ட நண்பர்களால் பாதை மாறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.


மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய சொந்தங்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள். புது வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் சொந்தவீடு கட்டி குடிபுகுவீர்கள். மகனுக்கு எங்கெல்லாமோ பெண் தேடி அலைந்தீர்களே, இனி உங்கள் அருகிலேயே உங்களுக்கு தெரிந்த சம்பந்தமே அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப் பிரிவில், புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவானதே, இனி வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.


வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அவ்வப்போது அடிவயிற்றில் வலியும் அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்யம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் மாடிப்படியில் ஏறும்போதும் சாலைகளை கடக்கும்போதும் சமையல் செய்யும்போதும் கவனம் தேவை. எடை மிகுந்த பொருட்களைத் தூக்காதீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சப்தம&விரயாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் வீடு, மனை சேரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு யோகமும் உண்டாகும். திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். உங்கள் அஷ்டம&லாபாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் வீண் அலைச்சலும் செலவினங்களும் பண இழப்புகளும் மூத்த சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டாலும் மற்றொரு பக்கம் திடீர் செல்வாக்கும் பணப்புழக்கமும் தங்க ஆபரண சேர்க்கையும் உண்டாகும்.

அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப் பாருங்கள். குடலுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும்.

உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இல்லத்தரசிகளே! எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்த கணவர் இனி அன்பாகப் பேசுவார். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களை நம்பி மேலதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும்.


பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். மாணவ&மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். முதல் மதிப்பெண் பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு.வியாபாரிகளே, அதிரடி லாபம் கிடைக்கும். வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள்.

கூட்டுத்தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்யோகஸ்தர்களே, நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டீர்களே! இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களில் சிலர் எந்த வேலையிலும் நிலைக்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தீர்களே! இனி அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளே, தொகுதிக்குள் நீங்கள் செய்யும் நற்செயல்களை மேலிடம் உற்று கவனிக்கும். சகாக்களின் ஆதரவு கிடைக்கும்.கலைத்துறையினரே! வாய்ப்புகள் எதுவாயினும் திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும்.விவசாயிகளே, நெல், கரும்பு சாகுபடியால் உங்கள் வருவாய் உயரும். இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர் யோகங்களையும் எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். வாழ்வில் முன்னேறுவீர்கள்.

No comments:

Post a Comment

Blogger Widgets